Thursday, April 8, 2010

சரத் பொன்சேகாவை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க ஆளும் கட்சி திட்டம்: தே.ஜ.கூட்டணி

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்திருக்க மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்று தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சவும், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்று அதிபரானார்.
இதையடுத்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடந்த போரின்போது, வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக பொன்சேகா மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தனி இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகாவை பிரதமருக்குரிய வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளன.
தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுச் செயலர் விஜித ஹேரத் கூறுகையில், பாராளுமன்றத் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்படுவார். பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் உரையாற்றத்தான் போகிறார். பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரை நீண்டகாலம் சிறையில் தள்ள ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்றார்.
தோ்தல் தொடர்பாக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில்,
நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றாலும், இராணுவ நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது எம்.பி., பதவி செல்லாது என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment